NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாபிரிக்க அணியில் டெவால்ட் பிரேவிஸ் !

“குட்டி AB” என அழைக்கப்படும் அதிரடி துடுப்பாட்ட வீரரான டெவால்ட் பிரேவிஸ் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்காக அறிவிக்கப்பட தென்னாபிரிக்க அணியில் முதன்முறையாக இடம்பிடித்துள்ளார்.

இம்மாதம் தென்னாபிரிக்கா வரும் அவுஸ்திரேலிய அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. இந்த தொடர்களுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருநாள் மற்றும் T20 அணிகளிலேயே பிரேவிஸ் இடம்பெற்றுள்ளார்.

தற்போது தன்னுடைய 20ஆவது அகவையை கடக்கும் பிரேவிஸ் 2022ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருந்ததோடு, IPL உட்பட T20 லீக்குகளிலும் அசத்தலான முறையில் செயற்பட்டிருந்தார். இவ்வாறான நிலை ஒன்றிலேயே பிரேவிஸிற்கு தனது தாயக அணியிலும் முதன் முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

எனவே பிரேவிஸிற்கு அவுஸ்திரேலிய தொடரின் முதல் பதினொருவரில் வாய்ப்பு கிடைக்கும் போது அவர் மத்திய வரிசை வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் T20 போட்டிகளில் மெதிவ் பிரிஸ்கேட்ஸே மற்றும் டொனோவேன் பெரெய்ரா ஆகிய துடுப்பாட்டவீரர்களுக்கும் அறிமுக வீரர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம் தென்னாபிரிக்க டெஸ்ட், ஒருநாள் அணிகளின் தலைவர் டெம்பா பவுமா உம் T20 குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

T20 தொடரில் அணியின் முக்கிய வீரர்களான குயின்டன் டி கொக், ஹெய்ன்ரிச் கிளாசன், ககிஸோ றபாடா மற்றும் என்ட்ரிச் நோர்கியே ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர உபாதையில் இருந்து மீண்டிருக்கும் சுழல் நட்சத்திரம் கேசவ் மகராஜ் தென்னாபிரிக்க அணிக்காக மீண்டும் ஆடவிருப்பது முக்கிய உள்ளடக்கமாக இருப்பதோடு, T20 போட்டிகளில் அறிமுகப் பந்துவீச்சாளராக ஜெரால்ட் கொயெட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

Share:

Related Articles