NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னிந்தியாவில் இருந்து நடிகைகள் வரவழைக்கப்படுவதும் போதையே..

தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளையத் தலைமுறை இன்று போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப் பாதைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் போதைப் பொருட்கள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டன.

இன்று அதைக் கைவிட முடியாத அளவுக்கு போதை, பெரும் புற்று நோயாகத் தமிழ்ச் சமூகத்தை அரிக்க ஆரம்பித்து விட்டது. இது போதாது என்று, இப்போது திட்டமிட்டுத் தென்னிந்தியாவில் இருந்து கும்மாள நடிகைகள் வரவழைக்கப்படுகின்றனர். இதுவும் தமிழ்ச் சமூகத்தைப் போதை மயப்படுத்தும் இன்னுமொரு நிகழ்ச்சி நிரலே என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை மல்லாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ .ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது மக்களின் பொழுது போக்குக்காக என்று சொல்லி இந்தியாவில் இருந்து கும்மாள நடிகைகள் கூட்டிவரப்படுகின்றனர் . ரம்பா, ஊர்வசி, மேனகாக்களைக் கொண்டு முனிவர்களின் தவத்தைக் கலைத்த கதைகள் புராணங்களில் நிறைய உண்டு. இந்தக் கதைகள் இப்போது எம் கண்முன்னே அரங்கேறத் தொடங்கி உள்ளன.

கஞ்சாவும் மாவாவும் ஐஸும் ஹெரோயினும் மாத்திரம் போதைப்பொருட்கள் அல்ல. மதியை மயக்கும் எல்லாமே போதைகள்தாம் . அந்தவகையிலேயே, எமது இளைஞர்களைக் குறிவைத்து கும்மாள நடிகைகளின் களியாட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இவை தொடர்ந்து நிகழுவதைத் தவிர்க்கும் முயற்சிகளில் தமிழ்ச் சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஈடுபடவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் உள ஆற்றுப்படுத்தலுக்குப் பொழுது போக்குகள் அவசியம். ஆனால், அந்தப் பொழுதுபோக்குகள் பண்பாட்டுச் சீரழிவுக்கு வித்துடுவனவையாக இருக்கக் கூடாது. பண்பாடு என்பது ஒரு இனத்துக்குத் தனித்துவமான , அந்த இனம் தன்னை யார் என்று உணர்ந்து கொள்ளவும், மற்றவர்களுக்குத் தன்னை யார் என்று அடையாளப்படுத்தவும் கூடிய ஒரு வாழ்க்கை முறை.

இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கின்ற நாம் எமது இனத்தின் பண்பாட்டு அடையாளங்களை எந்தக் கேளிக்கைளின் பொருட்டும் இழந்து விடக்கூடாது. நாமும் நமக்கென்று பல கலைகளைக்  கொண்டிருக்கிறோம். அவற்றை மேடையேற்ற உணர்வுள்ள பணம் படைத்தவர்கள் முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles