வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் பயிர்செய்கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்கம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் 5 ஹெக்டயருக்கும் குறைவான தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் உரத்தில் 27,500 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் பயிர்செய்கைக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் தேங்காய் நெருக்கடியால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை தற்போது 250 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் விலையேற்றமே பிரதான காரணம் என அதன் தலைவர் ஜெயந்த சமரகோன் குறிப்பிட்டார்.