எதிர்வரும் தேர்தலில் முரண்பாடுகள் ஏற்பட்டால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகள் குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
வேட்பாளர்களுக்கிடையிலான தகராறுகள், தேர்தல் பிரசார அலுவலகங்கள் எரிப்பு, தாக்குதல்கள் போன்ற பல்வேறு சம்பவங்களின் போது கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த திட்டத்தின் படி, தண்டனையின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்களின் குடியுரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்பதால், அத்தகைய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் தேர்தல் அலுவலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் அனைத்தும் தேர்தல் இணையத்தளம் ஊடாகவும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.