(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள பாடசாலையொன்றின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (16) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழிநுட்பம், வலுசக்தி சேமிப்பு, வலைப்பதிவு பிளெக்செயின் தொழில்நுட்பம் மற்றும் ஜெனொம் விஞ்ஞானம் போன்ற துறைகள் இன்று உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அந்த தொழில் நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்ல நமது வருங்கால சந்ததியை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கும் அரசியல் சம்பிரதாயத்திலிருந்து விலகி, எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னோக்கிச் செல்ல அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், புதிய கல்வி முறையின் மூலமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் வலியுறுத்தினார்.