NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடளாவிய ரீதியில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்த போராட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வைத்திய நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.

7 கோரிக்கைகளின் அடிப்படையாக வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், 5 தொழில்முறை பிரிவுகள் மற்றும் சுமார் 7000 அதிகாரிகளைக் கொண்ட துணை வைத்திய சேவைகளின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், கதிரியக்க வல்லுநர்கள், ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தியல் வல்லுநர்கள், பிசியோதெரபி வல்லுநர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை வல்லுநர்கள் ஆகிய 5 தொழில்முறை சங்கங்களை சேர்ந்தோரும் இணைந்து கொள்வர்.

மேலும், இன்று காலை 8 மணி முதல் ஓகஸ்ட் 25 ஆம் திகதி காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

ஆட்சேர்ப்பு நடைமுறையை மறுபரிசீலனை செய்வதை தொடர்ந்து தாமதப்படுத்துதல், தர உயர்வு தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுவதில் தாமதம், புதிய ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம் காரணமாக சேவைகள் சீர்குலைவதற்கு அனுமதித்தல், நியாயமற்ற ஒழுங்கு உத்தரவுகளைப் பயன்படுத்தி தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை ஒடுக்க முயற்சிக்கின்றன போன்ற விடயங்கள் போராட்டத்தில் முன்னிலைபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்தத்திற்காக, புற்றுநோய் நிறுவனம், தாய் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை, மத்திய இரத்த வங்கி போன்றவை வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது. மாறாக அங்கு இயல்பான வைத்திய நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அறியமுடிகின்றது.

சிலர் அதாவது அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தானாக முன்வந்து இந்த நிறுவனங்களின் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் போராட்ட ஏற்பாட்டு குழுவின் வைத்தியர் உருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேலைநிறுத்தம் நடைபெறும் வைத்தியசாலைகளின் உயிர் பாதுகாப்புப் பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அந்த நிறுவனங்களில் தன்னார்வ சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அந்த அதிகாரிகள் அந்த தன்னார்வ சேவைகளில் இருந்து அதே நேரத்தில் திரும்பப் பெறப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles