NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் விவசாயத்துறை தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானம்…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

மேலும், இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப கட்டப் பணிகள் இந்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, தேயிலை மற்றும் இறப்பர் தவிர, அண்மைக் காலங்களில் தென்னை சார்ந்த பொருட்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, 2020 உடன் ஒப்பிடும்போது, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சந்தை வாய்ப்புகள் சுமார் 15 வீதம் முதல் 20 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டார்.

குறிப்பாக தேங்காய் சிறட்டையினால் உற்பத்தி செய்யப்படும் ஆக்டிவேட்டட் கார்பன், தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் மற்றும் தேங்காய் பால் மா ஆகியவற்றுக்கு சர்வதேச சந்தையில் பாரிய கேள்வி நிலவுவதால் 2022 ஆம் ஆண்டில் 836 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாகவும், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் சுமார் 1.5 முதல் 2 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles