ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே தான் இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன் என ஐனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
டயகம பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்
இம்முறை ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியினூடாக மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன். பல எதிர் தரப்பினர் நான் கடந்த முறை தேர்தல் கேட்டுவிட்டு ஓடி ஒழிந்துவிட்டேன் எனக் கூறுகின்றனர். ஆனால், அப்படியல்ல. நான் ஓடவும் இல்லை. ஒழியவுமில்லை. இதே மலையகத்தில் தலைவாக்கலையில் தான் இருக்கிறேன்.
என்னுடைய தந்தை 1989 ஆம் ஆண்டு தேர்தல் கேட்டபோது தோல்வி அடைந்தார். முதலில் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. ஆரம்பகால உறுப்பினர்களுக்கு அது தெரியும். 1994 ஆம் ஆண்டு வரை அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் அதற்கு காரணம் அரசியல் பழிவாங்கல்.
ஒருவர் மலையகத்தில் புதிதாக உருவாக நினைத்தால் அவரை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவார்கள். நான் கடந்த முறை தேர்தல் கேட்ட பிறகு எனக்கும் நிறைய அரசியல் பலி வாங்கல்கள் நடந்தன.
நமக்கு வேலை செய்தவர்களுக்கு பழிவாங்கல்கள் செய்தார்கள். அதனால் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன.; சில அரசியலில் சில நேரங்களில் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அதை தான் நானும் செய்தேன்.
நான் பதுங்கி இருந்தது பாராளுமன்றத் தேர்தல் எப்போது வரும் அதில் பாய வேண்டும் என்று நான் பதுங்கி இருந்தேன்.
என்னுடைய தந்தை அமரச் சந்திரசேகரன் அவரின் மகள் தான் புலி. புலி எப்படி ஒழிந்து கொண்டிருக்கும். அது பதுங்கி தான் இருக்கும். அதேபோன்று தான் நானும. பதுங்கி இருந்தேன். இப்பொழுது எனக்கான நேரம் வந்துவிட்டது. ஆகவே களமிறங்கி இருக்கிறேன். இந்த முறை மிகவும் பலமாக ஒரு கட்சியினூடாக ஒரு தேசிய கட்சியினூடாக களம் இறங்கி இருக்கிறேன்.
நான் எங்கே சென்றேன் என்று கேட்பவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள். என்ன செய்து கொடுத்தார்கள் இந்த ஐந்து வருடத்தில் அவர்கள் செய்த மாற்றம் என்ன? மலையகத்துக்கு செய்த சேவைகள் என்ன? அதே விடையம் தான் இன்னும் இருக்கிறது. எந்த மாற்றமும் நடக்கவில்லை.
பழைய உறுப்பினர்களை நம்பி நம்பி ஏமாற்றமடைந்தது போதும். நமக்கு ஒரு புதிய பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும். பழைய உறுப்பினர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. எந்த சேவைகளும் செய்யவும் இல்லை.
என்னுடைய தந்தை 16 வருடங்களில் 35 ஆயிரம் வீடுகள் கட்டினார். ஆனால், இவர்கள் இன்று 3500 வீடுகளை கட்டிக் கொடுத்துவிட்டு பொய் பிரச்சாரங்கள் செய்து கொண்டு திரிகிறார்கள். 16 வருடங்களில் தந்தை பல சேவைகளை செய்திருக்கிறார். இவர்கள் ஒரு சேவையும் செய்ததாய் தெரியவில்லை.
எம்முடைய மக்களுக்கான ஒரு மாற்றம் வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மலையக மக்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். இன்னும் ஐந்து வருட காலத்தில் நான் இந்த இடத்துக்கு வரும்போது நம்மளுடைய பிள்ளைகள் இதே கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடாது. அதற்கான ஒரு மாற்றமாக தான் நான் ஒரு பெண்ணா? தனியாக இறங்கி நிற்கிறேன்.
உங்களுடைய ஆதரவு இந்த முறை எனக்கு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். உங்களுடைய பெண்கள் என்றால் எத்தனையேர் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணிடம் குடும்ப செலவுக்கு பணம் இருந்தால் அந்தப் பெண் குடும்பத்தை எவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்வார். அதேபோன்று தான் நானும் ஒரு பெண்ணாக இறங்கி இருக்கிறேன்.
ஒரு பெண்ணாக நான் மலையகத்தை கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடாத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இம்முறை நான் மைக் சின்னத்தில் களமிறங்கி இருக்கிறேன்.
இளைஞர்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் இந்த முறை உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறேன். கடந்த முறை இருந்த ஆதரவை விட இன்னும் அதிகமாக ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் பல இடங்களுக்குச் செல்கிறேன். அங்கே என் மீது வைத்திருக்கும் அன்பை பார்க்கிறேன். இம்முறை வெற்றி நிச்சயம் என்பதை அந்த அன்பு எனக்கு காட்டுகிறது. என்னுடைய தந்தை இங்கிருந்து எனது மகளுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லியிருந்தால் நிச்சயமாக உங்களது வாக்குகளை எனக்கு வழங்கி இருப்பீர்கள். இன்று தந்தை இல்லை ஆனால் தந்தைக்கு ஒப்பானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்து இந்த முறை நான் வாக்கு கேட்கிறேன்.
ஆனால், உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நான் பொறுப்பெடுத்து உங்களுடைய பிள்ளைகளுக்கான நல்ல கல்வியை கொடுத்து கல்வியின் மூலமாக இந்த நல்ல சமுதாயத்தை உயர்த்துவோம் என்பதை உறுதியாக சொல்கிறேன். இந்த முறை மைக் சின்னத்திற்கு உங்களுடைய ஆதரவு இருக்கும் என நம்புகின்றேன் என்றார்.