(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு இலங்கை பெரும் முயற்சிகளுக்கு மத்தியில், நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக மக்கள் மாத்திரமன்றி கால்நடைகள், பயிர்கள் அனைத்தும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
இதனால், அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், அரசாங்கம் மின்சாரத்தை தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்யவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அதன்படி, 6 மாதத்திற்குள் 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று முக்கிய நிபந்தனைகளில் கீழ் இன்று (18) முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மின் கொள்முதல் தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை செய்யப்பட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொத்மலை பொல்பிட்டி 220 கே.வி பாதை 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்தபப்ட்ட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மின்சார கொள்முதல் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இதனிடையே, நீர் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதால் காரணாமாக தேவை அதிகரிக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளொன்றுக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்யவேண்டிய நிலை ஏற்படுமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.