இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் டோங்க் மாவட்டத்தில் 33 ஆண்டுகளுக்கு பின், வழங்கப்பட்ட தீர்ப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஒருவரின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துவதானது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் வராது என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்யும் தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.
இதனால் சமூக செயற்பாட்டாளர்கள் இது தொடர்பில் தற்போது குரல் எழுப்பியும் சமூக வலைத்தளங்களில் இது பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
1991ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் டோங்க் மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் சுமார் 6 வயது நிரம்பிய சிறுமியை இரவு 8 மணியளவில் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, சிறுமியின் உள்ளாடைகளை களைந்து கொடூரமாக செயற்பட்டுள்ளார்.
இதனால் சத்தமாக கூச்சலிட்டு சிறுமி கத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதன்போது கலவரமடைந்த கோபி அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து பொதுமக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட கோபி, பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டதாக கூறி டோங்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொடர்ந்து இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த கோபி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வாசித்த நீதிபதி, 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது நேற்று குறித்த வழக்கிற்கு தீர்ப்பளித்திருந்தார்.
சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி, நிர்வாணப்படுத்தியது பாலியல் துஷ்பிரயோக முயற்சி இல்லை என்றும், அது பெண்ணின் நாகரிகத்தை சீர்குலைக்கும் குற்றம் என்று நீதிபதி தெரிவித்தார்.
ஏனெனில், சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி, முற்றிலும் நிர்வாணப்படுத்துவது பலாத்கார முயற்சி தொடர்பான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் பிரிவு 511ன் கீழ் வராது எனவும் பாலியல் வன்கொடுமை முயற்சி என்றால், குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆடைகளை கழற்றியதையும் தாண்டி சென்றிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய தண்டனைச் சட்டம் 354ஆவது பிரிவின் கீழ், ஒரு பெண்ணின் நாகரிகத்தை மீறுதல் என்ற குற்றத்தின் அடிப்படையில்தான் தண்டனை வழங்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்பான வழக்குகளை இரத்து செய்து, மானபங்க செயலுக்கான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பளித்தார்.
குறித்த தீர்ப்பானது, மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் பேசுபொருளாகவும் தற்போது மாறியுள்ளது.