(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் குடிநீர் இன்மையால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களும், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை – கொட்டியாகல காட்டில் இருந்து சுமார் 05 கிலோமீற்றர் தொலைவில் நோர்வூட் பிராந்திய சபை நீர் குழாய்களை பயன்படுத்தி பொகவந்தலாவை நகரத்திற்கு சுத்திகரிப்பு இன்றி நீரைப் பெறும் குழாய் அமைப்பின் ஊடாக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைக்கு நீர் விநியோகம் செய்து வருகின்றது.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் பிரதேசம் பல தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பல கிராமப் பகுதிகளினால் மூடப்பட்டுள்ளதாகவும், வெளிநோயாளர் பிரிவில் இருந்து தினமும் ஏராளமான நோயாளர்கள் சிகிச்சை பெற வருவதாகவும், சில நோயாளர்கள் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகவும் வைத்தியர் ஏ.எஸ்.கே.ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாட்களாக வைத்தியசாலைக்கு நீர் விநியோகம் இன்மையால் துப்புரவு பணிகளுக்காக வீடுகளில் இருந்து நீரை எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட வைத்திய அதிகாரி நோர்வூட் பிராந்திய சபையின் அதிகாரிகளுக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைத்தியசாலையில் தண்ணீர் இல்லை எனத் தெரிவித்திருந்த போதும், சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவை பிரதேசத்துக்கு நீர் வழங்கும் நீர்த்தாங்கியில் மணல் நிறைந்து இருப்பதால், அதனை அகற்றும் வரை தண்ணீர் விடுவது கடினம் என அதிகாரிகள் கூறியதாகவும், தண்ணீர் தொட்டியில் படிந்துள்ள மணல் மற்றும் உடைந்த தண்ணீர் குழாய்களை சீர் செய்ய தங்கள் உள்ளுராட்சி மன்ற ஊழியர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் உரிய அதிகாரி தெரிவித்ததாக மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பக்வந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு நீர் விநியோகிக்கப்படாவிட்டால் வைத்தியசாலையை தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மாவட்ட வைத்திய அதிகாரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.