NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாள அணியை பந்தாடிய இந்திய அணி!

நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஆசியக் கோப்பை தொடரின் 5வது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மழை பெய்ய வாய்ப்பிருந்தும் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதன்பின் துடுப்பாட்டம் செய்த நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ஓட்டங்கள் குவித்தது.

நேபாள அணி சார்பில் ஆசிப் ஷேக் 58 ஓட்டங்களும், சோம்பால் கமி 48 ஓட்டங்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் பின் 231 ஓட்டங்கள் இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ஓட்டங்கள் சேர்த்திருந்த போது கனமழை பெய்ய தொடங்கியது.

சுமார் 1.30 மணி நேரம் நீடித்த மழை, 10 மணியளவில் நின்றது. இதன்பின் ஆட்டம் 10.15 மணிக்கு தொடங்கியது. அப்போது டி.எல்.எஸ் விதிமுறைப்படி இந்திய அணி 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து ரோகித் சர்மா 49 பந்துகளில் அரைசதம் கடக்க, சுப்மன் கில் 47 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 14 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்தது.

இதன்பின் இருவரின் அதிரடியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல, இறுதியாக இந்திய அணி 20.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 147 ஓட்டங்கள் குவித்து வெற்றிபெற்றது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 59 பந்துகளில் 74 ஓட்டங்களும் சுப்மன் கில் 62 பந்துகளில் 67 ஓட்டங்களும் சேர்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணி டி.எல்.எஸ் விதிப்படி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles