நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக சென்ற ஊர்வலத்தின் போதும், பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.