NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பந்து ஈரமானதால் கடும் சவாலாக இருந்தது – சூர்யகுமார் யாதவ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

ரிங்கு சிங் 39 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கோயட்சி 3 விக்கெட்டும், மார்கோ ஜான்சென், லிசாட் வில்லியம்ஸ், ஷம்சி, மார்க்கிராம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மழையால் அந்த அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தென்ஆப்பிரிக்கா 7 பந்து எஞ்சியிருந்த நிலையில் இந்த இலக்கை எடுத்தது. அந்த அணி 13.5 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹென்ரிக்ஸ் 27 பந்தில் 49 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மார்க்கிராம் 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். முகேஷ் குமார் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

வெற்றி பெறுவதற்கு இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதல் 5 முதல் 6 ஓவர்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து விட்டனர். போட்டியின் முடிவையும் எங்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டனர். இது போன்று கிரிக்கெட்டில் நடப்பது சகஜம்தான்.

மழை குறுக்கிட்டதால் பந்து முழுவதுமாக ஈரமானது. இதனால் பந்து வீசுவதற்கு மிகவும் சவாலாக இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை நாங்கள் ஒரு பாடமாகவே பார்க்கிறோம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles