பஸ்களில் அதிக சத்தத்துடன் கூடிய கேசட் இயந்திரங்களை இயக்குவதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கான ஒழுங்குமுறைகளை தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை மத்திய சுற்றாடல் அதிகாரசபை, தொழில்நுட்ப தொழில்துறை நிறுவனம் ஊடாக இணைந்து வழங்கவுள்ளது.
இந்த ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பான பல சுற்று கலந்துரையாடல்கள் இதுவரை இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விதிமுறைகளை சுமார் ஆறு மாதங்களில் தயாரித்து இறுதி செய்ய முடியும் எனவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் இசையால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றமை தொடர்பிலும் சுட்டிக்காட்டிய அவர், 120 டெசிபல் ஒலியை சில நொடிகள் கேட்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பது குறித்து அவர் விளக்கமளித்தார்.
உரிய விதிமுறைகளைத் தயாரித்த பிறகு, மோட்டார் போக்குவரத்துத் துறை, பொலிஸ் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை இணைந்து பஸ்களை ஆய்வு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.
பஸ்களில் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஒழுங்குமுறைகள் தயாரிக்கப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் குறித்த விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
பஸ்களின் ஹோன்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கப்படுவதாகவும், இவற்றில் பெரும்பாலான ஹோன்கள் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 
				 
															






