டீசல் விலை நேற்று நள்ளிரமுதல் 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண பொறிமுறையை மாற்றியமைக்கும் போது எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கம் 4 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில் கட்டணம் அதிகரிக்கப்ப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும், முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டணம் அதிகரிக்கப்படும் நிலையில், பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மக்கள் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக முடியுமென முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 17 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய 359 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் புதிய விலை 231 ரூபா எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் முன்னதாக காணப்பட்ட எரிபொருள் விலைகளை விட மூன்று ரூபா குறைந்த விலையில் சினோபெக் நிறுவனம் எரிபொருளை விநியோகிப்பதாக அறிவித்தது. இதற்கமைய, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது.