NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவர்கள் உட்பட 22 தொழுநோயாளர் பதிவு – நோயை கண்டறிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

பொலன்னறுவை மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த வருடம் கண்டறியப்பட்ட மூன்று தொழுநோயாளர்கள் அடங்கலாக 25 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமன்கடுவ, அரலகங்வில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா 5 பேரும், மெதிரிகிரிய, லங்காபுர, சிரிபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தலா 3 பேரும், வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும், ஹிங்குராங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 15 வயதுக்குட்பட்ட 5 பேர் அடங்குவதுடன், நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டு அங்கவீனமான நிலையில் ஐவர் அடங்குவதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டவர்களில் தொற்றுவகை அறிகுறிகளைக் கொண்ட 19 பேரும் தோற்று அல்லாத வகை நோய் அறிகுறிகளைக் கொண்ட 6 பேரும் தனித்தனியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொழுநோயாளர்கள் பொலன்னறுவை, மெதிரிகிரிய மற்றும் ஹிங்குராங்கொட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தோலில் வெளிர் நிற புள்ளிகள் மற்றும் குறித்த இடத்தில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் சுயமாக நோயைக் கண்டறிவதற்கான வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு தோலில் வெளிர் நிற புள்ளிகள் காணப்படுமாயின் அவற்றை புகைப்படம் எடுத்து 075 4088604 அல்லது 075 4434085 என்னும் வட்ஸ்அப் இலக்கங்களுக்கு அனுப்புவதன் மூலம் நோய் குறித்த விடயங்களை அறிந்துகொள்ள முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாத நிலையில், அறிகுறிகள் தென்படுமாயின் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் தொடர்பில் அவசியமற்ற வகையில் அச்சம் கொள்ளாத தேவையில்லை எனவும், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியுமெனவும் பொலன்னறுவை தோற்று நோய் நிபுணர் வைத்தியர் பி.ஜி.ஒபாஷா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles