(யோ.தர்மராஜ்)
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திருத்தங்களுக்கு ஆதரவளிக்காவிட்டால் அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் நெருக்கடி நிலைமை ஏற்படும் என ஆளுந்தரப்பு சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தமிழ் எப்.எம் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடம் என்பதால் அடுத்த வருடத்தில் முக்கிய மூன்று தேர்தல்களை நடத்துவது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தல் சட்டத்துக்கு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினால் மாத்திரமே அடுத்த வருடம் தேர்தலை நடத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, தற்போதைய பாராளுமன்றத்தில் மாகாண சபைசட்டத் திருத்ததுக்கு ஆதரவு வழங்காத பட்சத்தில் அடுத்த வருடம் இடம்பெறும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அவ்வாறாயின், 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வருடமாக இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி முக்கிய உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாகவும் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.