(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாராளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களையும் புடவை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு திணைக்களத்தின் செயலாளர் கடந்த வாரம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தில் இளம் பெண்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் தலைவர்கள், பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் புடவை அணிந்து செல்லுமாறு பணிப்பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சில மேலதிகாரிகளால் வீட்டுப் பணிப்பெண்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவினால் மூவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
இதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் உள்ளதால், பாராளுமன்ற பராமரிப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பெண் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான உண்மைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், பணிப்பெண்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டோர் குழுவில் இதுவரை ஆஜராகி சாட்சியமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக தனி விசாரணை நடத்த பாராளுமன்ற மகளிர் மன்றம் முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.