புத்தளம் மாவட்டம் வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு தொங்கிக் கொண்டிருந்த நுளம்பு வலையொன்றின் நூல் பகுதி சிறுவனின் கழுத்தில் இறுகியாதாகவும் பெற்றோர்கள், வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சிறுவன் கழுத்து இறுகி கிடப்பதை பார்த்து உடனடியாக உறவினர்கள், அயலவர்களின் உதவியோடு புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹசாம், மரண விசாரணையை நடத்தினார்.
குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், கழுத்துப் பகுதி இறுகியமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பளித்து சடலத்தை பொற்றோரிடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.