புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹ_ங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு தொழில்சார் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இதன் ஓர் அங்கமாகவே சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் தொழில்சார் சட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.