இன்றைய பாhரளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவதற்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போது அரசு இணக்கம் தெரிவித்தது.
இதன்போது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் அரசிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி தொடர்பான பிரச்சினை, கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், பெருந்தோட்டப்பகுதிகளில் மதுபானசாலை திறப்பதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ள விவகாரம் உள்ளிட்டவை தொடர்பில் அவர் முக்கிய பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நிதி அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் மேற்படி கேள்விகள் தொடர்புபடுவதால் கல்வி அமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதிலளிப்பதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கு பிரதொரு நாளில் துறைசார் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் எனவும் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்,
தோட்டப்பகுதிகளில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை தொடர்பில் பேசுவதற்கு ஒருநாள் தனியான விவாதம் அவசியம். இன்று பதில் வழங்காவிட்டாலும், ஒரு நாள் விவாதத்தை தாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பெருத்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, விவாதத்துக்குரிய சந்தர்ப்பத்தை வழங்க தயார் எனக் குறிப்பிட்டார்.
இதன்படி, இன்று பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.