NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகாவலி வலயத்திற்கு மேலும் 15000 காணி உறுதிப்பத்திரம்…!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15 ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது வரட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குறிப்பிட்ட சில நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிக்கும் போது அது மின் உற்பத்தியைப் பாதிக்கும் எனக் கூறினார்.

அதேநேரம், அவ்வாறு நீரை விடுவிப்பதன் மூலம் மின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் நாட்டில் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை தோன்றும் சாத்தியம் இருப்பதால் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி என்ற 2 விடயங்களும் பாதிக்காத வகையில் இந்த சிக்கலைத் தீர்க்க முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், இது குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அங்கு மின்சாரத்தை துண்டிக்காத வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles