NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கை வெளியீடு..!

கடந்த அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒன்பது மாத காலப்பகுதியில் மதுபான உரிமங்களால் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில், சுதந்திரத்திற்கு பின்னர் 2022ஆம் ஆண்டு வரையில் மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போது அரசாங்கம் கட்டணம் அறவிட்டிருக்கவில்லை எனவும், அப்போது நாட்டில் நேரடியாக வரியை இழக்கும் போக்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபட சரியான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைக் குழு அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்ததன் காரணமாக, உடனடி நேரடி வரி இழப்புக்கு மாற்றாக அரசாங்க வருவாயை அதிகரிக்கவும், பணத்தை வசூலிக்கவும் மதுபான உரிமம் வழங்க தீர்மானிக்கப்பட்டது எனவும் அந்த அதறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரிமங்கள் அனைத்தும் மதுவரித் திணைக்களத்தின் விதிகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளின்படி வழங்கப்பட்டதாகவும், உரிமம் வழங்கும் போது மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் பரிந்துரைத்த விண்ணப்பங்களுக்கு மட்டும் மதுவரி உரிமம் வழங்கப்பட்டதாகவும் இந்த வழிமுறைக்கு அப்பால் ஒரு மதுவி; உரிமம் கூட வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது மதுபான அனுமதிப்பத்திரம் எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை எனவும் நாடு பொருளாதார சிக்கலில் இருந்த நேரத்தில் வரி வருமானத்திற்கு மேலதிகமாக நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வரும் புதிய உத்தியாக இந்த உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக நீண்ட கால நோக்குடன் செயற்படுத்தப்பட்ட இந்த மதுபான உரிமம் வழங்கும் நடைமுறையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, தற்போதைய வெளிப்படையான மற்றும் முறையான புதிய வருமான ஆதாரத்தை ஒழிக்கலாமா வேண்டாமா, இல்லை என்றால் புதிய மதுவரி சட்டத்தை சமர்பிப்பதா என்பதை அமைச்சர்கள் குழு முடிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதை தொடர அல்லது இரத்து செய்ய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles