NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி – 47 துப்பாக்கிகள் மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மனைவியை சுட்டுக் கொன்ற அமெரிக்க நீதிபதி ஒருவரின் வீட்டில் 47 துப்பாக்கிகளும் 26,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அமெரிக்கா – கலிபோர்னியாவில் பதிவாகியுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தில் நீதிபதிகளில் ஒருவரான 70 வயதுடைய ஜெப்ரி பேர்குசன் கடந்த வருடம் மதுபோதையில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் (15) நடைபெற்ற போதே குறித்த விடயம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றில் பேர்குசனுக்கும் 65 வயதான அவரின் மனைவி ஷெரிலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வாக்குவாதத்தின்போது, தனது விரல்களை துப்பாக்கிப் போன்று மனைவியை நோக்கி பேர்குசன் நீட்டினார் என அரச தரப்பு சட்டத்தரணி கூறினார். வாக்குவாதம் வீட்டிலும் தொடர்ந்தபோது, ‘ஏன் உண்மையான துப்பாக்கியை என்னை நோக்கி நீட்டவில்லை’ பேர்குசனின் மனைவி ஷெரில் கேட்டார்.

அப்போது தனது மனைவியை நோக்கி பேர்குசன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்’ எனவும் சட்டத்தரணி கூறினார் .

அதேவேளை பொலிஸார் நீதிபதியின் வீட்டுக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது 47 துப்பாக்கிகள் காணப்பட்டதாகவும் ஆனால், அவை சட்டபூர்வமான துப்பாக்கிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன் மீதான கொலைக் குற்றச்சாட்டை நீதிபதி பேர்குசன் நிராகரித்துள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles