கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் மூன்று வயது குழந்தை உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் அலட்சியமே காரணம் என குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்கள் வயதுடைய ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் (27) உயிரிழந்துள்ளது.
குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை, கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் தெரிவிக்கையில்,
“பயப்படாதீங்க, இன்னும் மூணு மாசத்துல சிறுநீரகம் ஒன்றை தேடி அவருக்குப் பொருத்தி உயிர்வாழ வைப்பதாக கூறினார்கள். அதன் காரணமாக குழந்தையின் நிலையை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருந்தோம். கடைசியாக எனது குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களும் இல்லை என கூறினார்கள்.
தொடர்ந்து அவரின் நிலை கவலைக்கிடமானது. வயிற்றோட்டம் செல்ல ஆரம்பித்தது. அதன் பிறகு, அவர் பலவீனமடைந்தார், சாப்பிடுவதை நிறுத்தினார், ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை. கடைசியில் என் குழந்தையை நான் இழந்தேன்.”
இது தொடர்பில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவிக்கையில், குழந்தையின் சிறுநீரகம் ஒழுங்கற்ற நிலையில் இருந்தமையினால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், சத்திரசிகிச்சையின் போது ஆரோக்கியமான சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
“இந்தக் குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களும் பிறந்தது முதலே அருகருகே இருந்ததால், செயலிழந்த சிறுநீரகத்தை அகற்றும் போது மற்றைய சிறுநீரகமும் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அதை அடையாளம் காண முடியவில்லை. அதனால்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பே இந்த குழந்தை கிருமி தொற்று ஏற்பட்ட இறந்துவிட்டது எனத் தெரிவித்தார்.