NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவி உயிரிழப்பு

பாடசாலை மாணவி ஒருவர் தையல் இயந்திரம் ஒன்றிற்கு தவறான முறையில் மின்சாரம் எடுக்கச் சென்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயதுடைய நிஷானி பியுமிகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அந்த மாணவி நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு திரும்பியிருந்தார்.

பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த நிஷானி, வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார்.அப்போது பாட்டி உடல் நலக்குறைவால் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

தையல் இயந்திரத்தின் மோட்டர் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்கை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளக் பொயிண்டுடன் இணைக்க மாணவி முயற்சித்த போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனை அடுத்து தவறான முறையில் மின்சாரம் பெற முயன்றபோது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மின்சாரம் தாக்கியதில் அவரது அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டு பெண் ஒருவர், அறையில் விழுந்து இருந்த மாணவியை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க விசாரணைளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நிஷானி பியுமிகாவின் தந்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles