மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை இன்று பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, இதற்கான ஏற்பாடுகள் பண்டாரநாயக்க ஞபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 2 வருடங்களுக்கு மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின், ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் மின்சார சபையின் உத்தேச வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை நிர்வகிப்பதற்கு மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமானது எனவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால், மின்கட்டணத்தை மீள மதிப்பிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதற்கான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் உள்ளூர் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு செலுத்துவதற்காக அரச வங்கி ஒன்றிலிருந்து 32 சதவீத வட்டி விகிதத்தில் பெறப்பட்ட மேலதிகப் பற்றுக்காக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 51 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை, வெளிதரப்பினருக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் அசல் கொடுப்பனவுகளின் தொகை 4 இலட்சத்து 21 ஆயிரத்து 818 மில்லியன் ரூபாவாகும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.