மியன்மாரில் சைபர் கிரைம் முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்களும் அடுத்த வாரத்திற்குள் தாயகம் அனுப்பப்படுவார்கள் என தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் பாங்காக்கில் உள்ள விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அனைவரும் நாடு திரும்புவதற்கு தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐ.நா.வின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு இலங்கையர்களுக்கான விமான டிக்கெட்டுகளை வழங்கும் என்று கூறியுள்ளது.
இதேவேளை, இலங்கையர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கு ஏதுவாக தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து – மியான்மர் எல்லையில் ஆயுதக் குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 56 இலங்கை இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு இணையக் குற்றங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலை வாய்ப்புகள் குறித்து வாக்குறுதி அளித்து அவர்கள் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்திருந்தது.
இதன்படி, சைபர் கிரைம் முகாமில் இருந்த எட்டு இலங்கையர்கள் மீக்கப்பட்டு, தாய்லாந்து – மியான்மர் நட்புறவு பாலம் ஊடாக நேற்று தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.