NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதல் காலாண்டிலேயே 6% வளர்ச்சி.

இவ்வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் என அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வருமான முறைமையை பார்வையிடும் போது, 2024 ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும் என மேலும் கருத்து தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஆண்டு பணப்புழக்கத்தை முகாமைத்துவம் செய்வதில் திறைசேரி கடும் சவாலை எதிர்கொள்கிறது. தற்போதைய சட்டத்தின்படி கடன் பெறவும், பணத்தை அச்சிடவும் முடியாமலிருப்பதே அதற்கு காரணமாகும். நலன்புரி மற்றும் மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் அதிகமாக காணப்பட்டாலும், நாட்டில் சரியான முறையில் நிதி நிர்வாகம் செய்யப்படுகிறது.மீள்கட்டமைப்புச் செலவுகள் குறித்து கவனம் செலுத்தி 2024 முதல் காலாண்டை 2020 முதல் காலாண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 2024 முதல் காலாண்டில் மீள் கட்டமைப்புச் செலவுகள் 35% அதிகரித்துள்ளன. கடன் வட்டியை திருப்பிச் செலுத்துவதிலும் 114% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மூலதனச் செலவுகளும் 60% ஆக அதிகரித்துள்ளன. பொதுக் கடனின் மூலதனத்தை திருப்பிச் செலுத்துவதிலும் 177% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும், 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 93,670 மில்லியன் ரூபா சமுர்திக் கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 117,107 மில்லியன் ரூபா நலன்புரி உதவிகளை வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 25% வளர்ச்சியைக் காண்பிக்கிறது.மேலும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமானம் 6% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 787 பில்லியன் ரூபா அரச வருமானமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாம் 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளோம்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 430 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. இலங்கை சுங்கம் 354 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மதுவரி திணைக்களம் 51 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்நிலை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும். நாட்டில் சரியான நிதி முகாமைத்துவம் காணப்படுவதையும் உறுதிசெய்ய முடிந்துள்ளது.மேலும் இவ்வாறான வருமான முறையைக் கருத்தில் கொண்டால் 2024ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும் என நம்பலாம்.அத்தோடு, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் படி, பெப்ரவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.1% ஆக காணப்பட்டது. இது மார்ச் மாதத்தில் 2.5%மாக குன்றியது. அதேபோல் பெப்ரவரியில் 5.1% ஆக இருந்த உணவு பணவீக்கம் மார்ச் மாதத்தில் 0.7% ஆக கணிசமானக் குறைவைக் காட்டுகிறது.இந்த அனைத்து தரவுகளும் நாட்டின் பொருளாதார நிலைமை சுமூகமான தன்மையை அடைந்துள்ளதை உறுத்திப்படுத்துகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles