NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மும்பையில் சொகுசு காரை தேநீர் கடையாக மாற்றிய இளைஞர்கள் – இணையத்தில் வைரல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மும்பையில் இரு இளைஞர்கள் தங்கள் சொகுசு காரை தேநீர் கடையாக மாற்றி நுகர்வோரை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த இரு இளைஞர்கள் தங்களது சுமார் 70 இலட்சம் ரூபாய் (இந்திய பெறுமதிப்படி) மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் தேநீர் விற்பதற்கான பொருட்களை ஏற்றி தேநீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

மும்பை – அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் தேநீர் கடையை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, தேநீர் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர்.

இந்த நூதன முயற்சி குறித்து இளைஞர்கள் கூறியபோது, நாங்கள் இரவில் ஒருநாள் தேநீர் குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக ‘டீ’ ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம்.

நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கு சைக்கிளில் செல்பவர்களும் டீ குடிக்கிறார். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் ‘டீ’யை ருசிக்கிறார்கள்.

இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே ‘டீ’ தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம் என தெரிவித்தனர்.

டீ கடை தொடங்குவதற்கு முன்பு அரியானாவை சேர்ந்த மன்னு சர்மா என்னும் இளைஞர் ஆப்பிரிக்க நிறுவனம் ஒன்றிலும், அதேபோல அமித் கஷ்யப் எனும் இளைஞர் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீ கடைக்காரராகவும் மாறியுள்ளனர்.

இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீ கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles