NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்று ஆண்டுகளுக்கான IPL போட்டி திகதிகள் அறிவிப்பு..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகளை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வருகின்ற மார்ச் 14ஆம் திகதி, 2025 ஆம் ஆண்டுக்கான 18ஆவது தொடர் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டி மே 25ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு தொடர் மார்ச் 15ஆம் திகதி முதல் மே 31ஆம் திகதி வரையிலும், 2027ஆம் ஆண்டு தொடர் மார்ச் 14ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 தொடர்களைப் போலவே 2025ஆம் ஆண்டு தொடரிலும் 74 போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான திகதி குறித்து இன்று (22) காலை அணி உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இடம், எந்த எந்த திகதிகளில் அணிகள் மோதுவது உள்ளிட்ட விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 574 வீரர்கள் இடம் பெற்றனர்.

இதில் 366 இந்தியர்களும் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இம்முறை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 19 இலங்கை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் இந்திய பெறுமதியில் அதிகபட்ச தொகையான 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இது தவிர, 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் 15 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவன் துஷார, ஜெப்ரி வெண்டர்சே, பெத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சமீர, சரித் அசலங்க, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுஷங்க, துஷான் ஹேமன்த, தசுன் ஷானக மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் 75 இலட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.

Share:

Related Articles