NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மே 18 தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 2009இல் முடிவடைந்த நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் மே 18 தொடர்பில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஏராளமான போராளிகள் மற்றும் சிவிலியன் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டனர் அல்லது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ளது.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதி வழங்கப்படவில்லை மாறாக இலங்கை அரசாங்கம் தனது படைகள் செய்த அட்டூழியங்களை மறுத்து வருகிறது. காணாமல் போனவர்களின் தாய்மார்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் தலைவிதியை அறிய தொடர்ந்து முயன்று வரும் ஒரு குழுவினர், பாதுகாப்பு படையினரின் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

காணாமற்போனோரைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

உள்நாட்டுப் போரின்போதும் அதற்குப் பின்னரும் நடந்த பாரதூரமான உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தீவிரமாக விசாரித்து உரிய முறையில் தண்டிக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக இலங்கை நிர்வாகங்களை விமர்சித்து வருகின்றன.

போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு விசாரணையை தொடர அரசாங்கம் விரும்பாததால், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சர்வதேசத்திடம் நீதியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இலங்கை மற்றும் வெளிநாட்டு நீதித்துறை அதிகாரிகளின் ‘கலப்பின’ செயல்முறையை திட்டமிடும் முந்தைய ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகிய பின்னர், எதிர்கால வழக்குகளில் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஒரு பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை’ உருவாக்குவதற்கு முன்மொழிந்தார்.

ஆனால் முந்தைய அனைத்து உள்நாட்டு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது நீதிக்கான முயற்சிகளை ஊக்குவிப்பதை விட ஓரங்கட்டுவதற்கான ஒரு வழியாகும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கை அரசாங்கம் முட்டுக்கட்டை போடுவதை நிறுத்திவிட்டு, பலர் பாதிக்கப்பட்டுள்ள பாரதூரமான மீறல்களை விசாரித்து வழக்குத் தொடர வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும், அதுவரை, இலங்கையின் நீதியை வெளிநாடுகளில் தீவிரமாக தொடர ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்துடன் ஏனைய நாடுகள் இணைந்து செயற்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்ஷி கங்குலி கோரியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles