NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் மாநகர சபையால் அடுத்த ஆண்டு முதல் பழைய கட்டடங்கள் புனரமைக்கப்படும் – நா. வேதநாயகன்..!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் , அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் சனிக்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,   யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் தூய்மையான நகரமாக இருந்தது. யாழ்ப்பாணம் இன்று மோசமாக இருக்கின்றது. தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

இந்த மீன் சந்தை மிகவும் கஷடப்பட்டே கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் இது அமைக்கப்பட்டமையின் வெற்றி தங்கியிருக்கின்றது. 

இது உங்களுக்குரிய கட்டடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது என ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

Share:

Related Articles