NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைனில் நேட்டோ நாடுகளின் இராணுவ படை குவிப்பு

அமெரிக்க இராணுவ பென்டகனின் ரகசிய ஆவணங்கள் பல கடந்த வாரம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

‘சீக்ரெட்’ மற்றும் ‘டாப் சீக்ரெட்’ என்ற பெயர்களில் கசிந்த 50-க்கும் மேற்பட்ட ஆவணங்களில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரைனுக்கு உதவி புரிவதற்கான அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளின் திட்டங்கள் உட்பட பல முக்கிய தகவல்கள் வெளியாகின.

அமெரிக்க இராணுவத்தின் ரகசிய ஆவணங்கள் கசிந்ததன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், யுக்ரைனுக்கு நேட்டோ உறுப்புநாடுகள் ஆயுதங்களை மட்டுமே வழங்கி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நேட்டோ நாடுகளின் சிறப்பு இராணுவ படைகள் யுக்ரைனில் செயல்படுவது இணையத்தில் கசித்த பென்டகனின் ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.

மார்ச் 23 ஆம் திகதியிட்ட அந்த ஆவணத்தின்படி யுக்ரைனில் இங்கிலாந்து அதிக அளவில் சிறப்பு இராணுவ படைகளை குவித்துள்ளதாக தெரிகின்றது. 

இங்கிலாந்தின் 50 சிறப்பு படைகள் உக்ரைனில் செயல்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தை தொடர்ந்து, சக நேட்டோ நாடுகளான லாட்வியா 17 படைகளையும், பிரான்ஸ் 15 படைகளையும் நிறுத்தியுள்ளதாக தெரிகின்றது. 

அதேபோல் அமெரிக்கா 14 படைகளையும், நெதர்லாந்து 1 சிறப்பு படையையும் நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த படைகள் யுக்ரைனின் எந்தெந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

யுக்ரைனில் நேட்டோ நாடுகள் தங்களின் சிறப்பு இராணுவ படைகளை நிறுத்தியிருப்பது போரை யுக்ரைனை தாண்டி பெரிய அளவில் விரிவுபடுத்தி அணுஆயுத போருக்கு வழிவகுக்கும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

யுக்ரைனில் சிறப்பு படைகள் செயல்படுவதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து அமெரிக்கா உட்பட சம்பந்தப்பட்ட 5 நாடுகளும் வாய்திறக்கவில்லை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles