NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுக்ரைன் அணை உடைப்பு விவகாரம் – பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யுக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள நோவா ககோவ்கா அணை தகர்த்தப்பட்டதில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 48ஆக உயர்வடைந்துள்ளது.

1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீற்றர் உயரமும், 3.2 கிலோ மீற்றர் நீளமும் கொண்டது. சுமார் 7 இலட்சம் பேர் இந்த அணையில் உள்ள நீரை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

அத்துடன், இங்கு மிகப்பெரிய நீர்மின் நிலையமும் செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி யுக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தியதில், இந்த அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கு ஐ.நா சபை மற்றும் உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இந்த சம்பவத்துக்கு யுக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த சம்பவத்தால் உலகளாவிய உணவுச்சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் எனவும், இலட்சக்கணக்கானோருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் சுமார் 40 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வெள்ளத்தில் மூழ்கி 15க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகின.

அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக யுக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles