NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜபக்ஷக்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து திரட்டல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரே காரணம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ராஜபக்ஷக்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று (23) கொழும்பு பிரதான புகையிரத நிலையத்துக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது.

மேலும், நாட்டை வங்குரோத்தாக்கிய நபர்களின் பிரஜா உரிமைகளை இரத்துச் செய்தல், இவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது, நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே கையெழுத்து திரட்டும் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானது.

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இணைந்து ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதுடன் சமய தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கையொப்பங்களை பதிவிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

இது, கோட்டாபய, மஹிந்த, பெசில் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல். இச் செயற்பாடுகளினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு காரணமானவர்களிடமிருந்தே நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பமாகும். அதுபோன்று, இதுதொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து உயரிய சட்டமான அரசியலமைப்பின் பிரகாரம் இவர்கள் மூவர்களிடம் மாத்திரமல்லாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடமையாகும்.

தொடர்ந்து ராஜபக்ஷக்களின் பாதுகாவலராக செயற்படாமல் மக்களின் பாதுகாவலனாகவே ஜனாதிபதி செயற்பட வேண்டும். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு ராஜபக்ஷக்களுடன் இணைந்த குழுவினரும் முக்கிய காரணமானவர்களாவர் என்று குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles