(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் மாதம் முதல் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்ச்சியாக விலை குறைக்கப்படும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற விபரத்தை இப்போதே குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியிருந்தமைக்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது. 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயுவின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.