லிபியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
86 பேருடன் லிபியாவின் சுவாரா நகரிலிருந்து இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உயரமான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்துள்ளதாகவும், குழந்தைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயிருப்பதாகவும், அவர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கருதப்படுகிறது.
இருப்பினும், உயிர் தப்பிய 25 பேர் லிபிய தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் வெளியேறும் முக்கிய இடங்களில் லிபியாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டில் மாத்திரம் மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றவர்களில் 2 ஆயிரத்து 200 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.