தரவரிசையில் முதல் எட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்ற ஏ.டி.பி. இறுதி சுற்று எனும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.
இதில் நேற்று முன்தினம்(19) இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியைச் சேர்ந்த 4-ம் நிலை வீரர் யானிக் சின்னெரை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றி லீக்கில் அவரிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த பட்டத்தை ஜோகோவிச் ருசிப்பது இது 7-வது முறையாகும். இதற்கு முன்பு 2008, 2012, 2013, 2014, 2015, 2022 ஆகிய ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் இந்த பட்டத்தை இதற்கு முன்பு அதிக முறை வென்றிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் (6 தடவை) சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. முதலிடத்தை ஜோகோவிச் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2012-ம் ஆண்டில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ அரிணையில் ஏறிய ஜோகோவிச், அதன் பிறகு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்.
இது அவர் முதலிடத்தை அலங்கரிக்கும் 400-வது வாரமாகும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் இவர் தான். இந்த சாதனை பட்டியலில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்களுடன் 2-வது இடத்திலுள்ளார்.
36 வயதான ஜோகோவிச் கூறுகையில், ‘400 வாரங்கள் முதலிடம் என்பது மிகப்பெரிய சாதனை. டென்னிஸ் வரலாற்றில் இதற்கு முன்பு யாரும் செய்திராத ஒன்று. என்றாலும் அடுத்து வேறு எந்த வீரராவது இந்த சாதனையை முறியடிப்பார்கள். ஆனால் நீண்ட காலம் இச்சாதனை நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன்’ என்றுள்ளார்.