வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மேலும், மஹோற்சவம், எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
மகோற்சவ காலத்தில் ஓகஸ்ட் 30ஆம் திகதி, மாலை 4.45க்கு மஞ்சத் திருவிழாவும், செப்ரெம்பர் 4ஆம் திகதி இரவு 7 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை 4.45க்கு கார்திகை உற்சவமும், செப்ரெம்பர் 8 ஆம் திகதி காலை 6.45க்கு சூர்யோற்சவமும், செப்ரெம்பர் 9 ஆம் திகதி காலை 6.45க்கு சந்தான கோபாலர் உற்சவமும், அன்று மாலை 4.45க்கு கைலாச வாகனமும் இடம்பெறவுள்ளன.
இதையடுத்து செப்ரெம்பர் 10 ஆம் திகதி காலை 06.45க்கு கஜவல்லி – மஹாவல்லி உற்சவமும், மாலை 4.45க்கு வேல் விமானமும், செப்ரெம்பர் 11 ஆம் திகதி காலை 6.45 க்கு மாழ்பழத் திருவிழா எனப்படும் தெண்டாயுதபாணி உற்சவமும், மாலை 4.45க்கு ஒருமுகத் திருவிழாவும், செப்ரெம்பர் 12 ஆம் திகதி மாலை 4.45க்கு சப்பறத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
அதேநேரம், செப்ரெம்பர் 13 திகதி, காலை 6.15க்கு தேர்த் திருவிழாவும், செப்ரெம்பர் 14 திகதி, காலை 06.15க்குத் தீர்தோற்சவமும், செப்ரெம்பர் 15 ஆம் திகதி மாலை 4.45க்கு பூங்காவன உற்சவமும், 16 ஆம் திகதி மாலை 4.45க்கு வைரவர் சாந்தியும் நடைபெறவுள்ளன.
இதற்கமைய, மகோற்சவகால ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, உற்சவ காலத்தில், அதாவது எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி வரை ஆலயத்தை சூழவுள்ள, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, அரசடி வீதி, கோவில் வீதி, செட்டித்தெரு வீதி ஆகிய வீதிகளின் ஊடான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கான மாற்று ஏற்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆலயச் சுற்றாடலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கண்காணிப்புக்குப் பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதுடன், சுகாதாரம், நீர் விநியோகம், சுத்திகரிப்புப் பணிகள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.