வவுனியா – தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு மற்றும் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இலக்காகி இளம் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் (23) அதிகாலை குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் உரிமையாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து காயமடைந்த நபர் வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்த குழுவினர், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பெண்கள் உட்படப் பலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டிற்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் இருந்த இளம் குடும்ப பெண் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அவரது கணவர், சிறுவர்கள் பெண்கள் உட்பட 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்கள் அடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.