விசேட தேவையுடையோர் நலன்புரிக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவுகள் இந்த ஆண்டு முதல் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, விசேட தேவையுடையோருக்கான கல்வி உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும்,
விசேட தேவையுடையோருக்கான சுயதொழில் உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாவிலிருந்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும்,
விசேட தேவையுடையோருக்கான உபகரணங்களுக்காக வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா உதவித் தொகை 35 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் கூறியுள்ளார்.
அத்துடன், விசேட தேவையுடையோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை 5 இலட்சமாக ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும்,
விசேட தேவையுடையோர்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா உதவித்தொகை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், விசேட தேவையுடையோருக்கான கழிப்பறை கட்ட வழங்கப்படும் உதவித்தொகை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.