NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் அறிமுகமாகும் ஆப்பிள் ஐபேட் மினி 7 !

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் எப்போது வரும் என பயனர்கள் காத்திருப்பதுண்டு. அந்த வகையில் புதிய கேட்ஜெட் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நிறுவனம் விரைவில் ஆப்பிள் ஐபேட் மினி 7 எனும் புதிய வெர்ஷன் சின்ன டேப்லெட்டை அறிமுகம் செய்யவுள்ளது.

செப்டம்பர் மாதம் இந்த வெளியீட்டு நிகழ்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆப்பிள் 6ஆம் தலைமுறை டேப்லெட்டில் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், அடுத்து வரும் ஐபோன் 15, ஐபோன் 15 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களில் ஏ16, ஏ17 சிப்செட்டுகள் கொடுக்கப்படுகிறது.

இதில் ஏதேனும் ஒரு சிப்செட் புதிய மினி ஐபேடில் இருக்கும் என நம்பப்படுகிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை தொடர்ந்து கவனித்து வரும் “ShrimpApplePro” இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. மேலும், ப்ளூம்பெர்க் செய்தியாளர் மார்க் குர்மன், சிறிய அப்டேட்டுகள் உடன் தான் புதிய ஐபேட் 7 மினி சந்தையில் வெளியாகும் என்றும், சரியாக சொல்ல வேண்டும் என்றால் சிப்செட்டில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதுவரை கிடைத்த தகவலின்படி, புதிய ஆப்பிள் ஐபேட் மினி 7 டேப்லெட்டில் ஃபோட்டோனிக் எஞ்சின், ப்ரோரெஸ் வீடியோ ரெக்கார்டிங், ஆடியோ சூம் போன்ற புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும், லேட்டஸ்ட் வெர்ஷன் வை-ஃபை 6E, ப்ளூடூத் 5.3 ஆகிய இடம்பெறும் என்று தெரியவந்துள்ளன.

இதனுடன் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் புதிய தலைமுறை ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஆனது, 41 மிமீ மற்றும் 45 மிமீ கேஸ் அளவுகளுடன், சீரிஸ் 8 இன் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஆனால் அலுமினிய மாடலுக்கு புதிய இளஞ்சிவப்பு நிறம் கொண்டுவரப்படுகிறது. பழைய ஐபேட் மினி 6 சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய ஐபேட் இதைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபேட் மினி 7 சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் புதிய மினி டேப்லெட் ஏ16 பயோனிக் சிப் கொண்டிருக்கும். இது தற்போது விற்பனையில் இருக்கும் ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் உள்ள சிப் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ஐபேட் ஏர் டேப்லெட்டை போன்று மினியிலும் எம்1 சிப் வேண்டும் என பல பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles