லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான நான்காவது பருவகாலத் தொடர் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
தொடருக்கான முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் வீரர்களை 21 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் தொடரின் நடப்புச் சம்பியன்களாக காணப்படும் ஜப்னா கிங்ஸ் அணி இந்த ஆண்டுக்கான LPL தொடரினை வெற்றியுடன் ஆரம்பம் செய்திருக்கின்றது.
ஜப்னா கிங்ஸ் – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் இடையிலான LPL தொடரின் முதல் போட்டி நேற்று (30) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நிரோஷன் டிக்வெல்ல தலைமையிலான கொழும்பு வீரர்கள் ஜப்னா கிங்ஸ் அணியினை முதலில் துடுப்பாடப் பணித்தனர்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் ஒன்றினை எதிர்கொண்ட போதிலும் மத்திய வரிசையில் கைகொடுத்த தவ்ஹீத் ரிதோயின் பெறுமதியான அரைச்சதத்தோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தவ்ஹீத் ரித்தோய் 39 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை எடுத்தார்.
மறுமுனையில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் நஷீம் ஷா, மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரட்ன மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர். பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி அதன் தலைவர் நிரோஷன் டிக்வெல்ல மூலம் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும் ஏனைய வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாக 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது. கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிரோஷன் டிக்வெல்ல 34 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ஹார்துஸ் விலோஜன் 03 விக்கெட்டுக்களையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் 02 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணியின் விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவாகியமைக் குறிப்பிடத்தக்கது.