NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியசாலைகளில் மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்பதை இலங்கை மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சின் செயலாளரும் மின்சார சபைத் தலைவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மின்சார சபையினால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக திறைசேரியிலிருந்து 120 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியால் சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மின் கட்டணம் செலுத்துவதில் சுமார் 4 தொடக்கம் 5 மாதங்கள் வரையில் நிலுவையில் காணப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த நிலுவைத்தொகை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன் பிரகாரம் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறும் அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் முறையாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான பணம் முறையாக வழங்கப்படும் எனவும் திறைசேரி உத்தரவாதம் வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை மூலம் இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்படாமை காரணமாக மின் விநியோக தடைக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அண்மைய தினங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி, கடந்த 5 மாத நிலுவைத் தொகையை இவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வைத்தியசாலையின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் நிலவிய நிலையில் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Related Articles