NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைத்தியர்களின் விடுமுறை தொடர்பில் சுகாதார அமைச்சரின் விளக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்கான விடுமுறையினை வழங்குவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்காக கோரப்படும் விடுமுறைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவல் தொடர்பில் கருத்துரைக்கையிலே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னதாக வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 274 வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், விடுமுறைக்கு அனுமதி வழங்கப்படாமையினால் இந்த வருடம் குறித்த எண்ணிக்கையில் 50 சதவீதமானவர்கள் கூட வெளிநாடுகளுக்கு செல்லவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருதலைப்பட்சமான தீர்மானங்கள் காரணமாக தற்போது நாட்டிலுள்ள வைத்தியர்களும் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை தோன்றுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles