NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அங்கவீனமுற்றோர் பாராளுமன்றத்திற்கு சுற்றுப்பயணம்!

அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் நாடளாவிய ரீதியில் உள்ள செவிப்புலன், பார்வை மற்றும் உடலியல் ரீதியாக அங்கவீனமானவர்கள் சிலர் இன்று (17) பாராளுமன்றத்தைப் பார்வையிடும் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற நடைமுறை தொடர்பில் புரிதலை பெற்றுக்கொள்வதற்கு மற்றும் மக்கள் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின், பொதுமக்கள் வெளித்தொடர்பு பிரிவினால் அவர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து இவர்கள், அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவைச் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, தமது சமூகத்தினர் முகங்கொடுக்கும் சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பில் அவர்கள் விடயங்களை முன்வைத்தனர். தமக்கு சமூகத்தில் விசேட வாய்ப்புகள் அன்றி, சம வாய்ப்புகளே வழங்கப்பட வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தற்பொழுது அங்கவீனமுற்றவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குதல் மற்றும் சம வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் சமூகத்தில் என்றுமில்லாத வகையில் கலந்துரையாடல் உருவாகியுள்ளமை சாதகமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதன்போது அங்கவீனர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைப் பிரதித் தலைவர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரும் அங்கவீனமுற்றோரின் அமைப்புக்களின் ஒன்றிணைந்த முன்னணியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதை அடுத்து அவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இணைந்துகொண்டார். 

Share:

Related Articles