NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதானியிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அரச தரப்பு கலந்துரையாடல்!

அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை 6 சத டொலருக்கும் குறைவாகக் குறைப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த வாரம், இலங்கை அரசாங்கம் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததாக சில ஊடக அறிக்கைகள் வெளிவந்த நிலையில், பின்னர் இலங்கை அரசாங்கமும் அதானியும் அந்த ஊடக அறிக்கைகளை மறுத்தன.

அதானி குழுமத்தின் எரிசக்திப் பிரிவான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 2 காற்றாலை மின் ஆலைகளை நிர்மாணிப்பதற்கு இலங்கையுடன் ஒப்பந்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்ததது.

அதானி நிறுவனம், ஒரு அலகு மின்சாரத்திற்கு 8.25 அமெரிக்க சத டொலர் விலை கோரியுள்ளதாகவும், போட்டி ஏலம் இல்லாமல் இந்த திட்டங்களை அதிக அலகு விலைக்கு வழங்கியது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களின் தொடக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைக்க முடியும் என தான் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles