NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிபர் – ஆசிரியர்கள் போராட்டத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகம்..! தொடரும் பெரும் பதற்றநிலை

இலங்கை ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பதற்றநிலையானது தொடர்வதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டதுடன் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று நடைபெறுகின்ற போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையான வீதியையும், என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையான கல்லுப்பார வரையிலான வீதியையும் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை வீதிகளை தடை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர், சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று காலை பாடசாலைக்குச் சென்ற பெரும்பாலான மாணவர்கள், வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளதுடன் கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளது.

வேதன நிலுவையை வழங்கக் கோரியும் அதிபர், ஆசிரியர் சேவையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles